“முடிவுக்கு வந்த அமைதி ஒப்பந்தம்…? லெபனான் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்… 4,000-ஐ கடந்த மரண ஓலம்…!!”

By Swetha on ஆனி 21, 2026

Spread the love

காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்குப் போட்டியாக லெபனானில் இருந்து ஹெஸ்பொல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் ஆதரவோடு, லெபனான் அரசின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் இந்த ஹெஸ்பொல்லா அமைப்பை ஒடுக்கவும், தனது நாட்டின் வடக்கு எல்லையைப் பாதுகாக்கவும் இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது தீவிரமான வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

இஸ்ரேலின் இந்த சரமாரியான தாக்குதல்களால் லெபனானில் பெரும் மனிதப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 2-ம் தேதி முதல் தற்போது வரை அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,000-ஐ கடந்து, மொத்தம் 4,057 பேராக அதிகரித்துள்ளதாக லெபனான் அரசு அறிவித்துள்ளது. மேலும், 12,121 பேர் படுகாயமடைந்துள்ள சூழலில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டுமே சுமார் 100 பேர் பலியாகியிருப்பது அங்குள்ள போர் நிலவரத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது.

   

சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டு, முக்கிய வர்த்தகப் பாதையான ஹர்மூஸ் நீரிணை திறக்கப்பட்டது. ஆனால், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய இந்த ஆக்ரோஷமான தாக்குதலால் கோபமடைந்த ஈரான், மீண்டும் ஹர்மூஸ் நீரிணையை மூடிவிட்டது. இதனால், மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டுவர முயற்சிக்கும் அமெரிக்காவிற்கு, இஸ்ரேலின் இந்த தன்னிச்சையான போர்க்குணம் தற்போது ஒரு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.