FLASH NEWS: 254 பேர் பலி.. 10 நிமிடத்தில் 100 ஏவுகணைகள்… லெபனானில் பெரும் துயரம்….!

By Nanthini on சித்திரை 9, 2026

Spread the love

வளைகுடா பிராந்தியத்தில் நிலவி வந்த போர் பதற்றம் தற்காலிகமாக முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்ட நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள மிக மோசமான வான்வழித் தாக்குதல் சர்வதேச சமூகத்தை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கக் கூட்டுப் படைகளுக்கும், ஈரானுக்கும் இடையே நீடித்த மோதல் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் ஒரு வழியாக ஒரு வாரத்திற்குப் பிறகு நேற்று முடிவுக்கு வந்தது. இருப்பினும், இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்குப் பொருந்தாது என திட்டவட்டமாக அறிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே லெபனான் மீது 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதலைத் தொடுத்துள்ளார்.

இந்தத் திடீர் தாக்குதலால் லெபனானில் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சைடா நகரின் உணவகம் மற்றும் பால்பெக் பகுதியில் நடந்த இறுதிச்சடங்கு ஊர்வலம் ஆகியவற்றைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை 254 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 1,100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். வெறும் 10 நிமிட இடைவெளியில் நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலால் குடியிருப்புப் பகுதிகள் உருக்குலைந்துள்ளன. இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. லெபனான் அதிபர் ஜோசப் அவூன் இந்தச் செயலை “மிருகத்தனமான படுகொலை” என்று சாடியுள்ளதோடு, அமைதி முயற்சிகளை இஸ்ரேல் அப்பட்டமாக மீறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

   

இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்குப் பதிலடியாக, ஈரான் தனது மிக முக்கிய கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தற்போது எட்டப்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்தத்திலிருந்து ஈரான் அதிகாரப்பூர்வமாக விலகும் என்று எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தச் சூழலில், இஸ்ரேலின் இந்த அதிரடித் தாக்குதல் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் ஒரு முழு அளவிலான போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.