“இதெல்லாம் ஒரு வதந்தியா?”… மணமகனுக்கு இது 3வது கல்யாணமா?… தாலி கட்டும் நேரத்தில் நின்ற திருமணம்! உ.பி-யில் பரபரப்பு…!!!

By Muthu Mani on வைகாசி 1, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், ஒரு சிறிய வதந்தியால் கோலாகலமாக நடக்கவிருந்த திருமணம் பாதியிலேயே நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் கூட்டுத் திருமணத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்ட அரவிந்த் – சந்தோஷ் தம்பதியினருக்கு, குடும்ப வழக்கப்படி மீண்டும் ஒருமுறை ஊர்வலத்துடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மணமகன் தரப்பில் வந்த நபர் ஒருவர், இது மணமகனுக்கு மூன்றாவது திருமணம் என்று கிளப்பிவிட்ட ஒரு வதந்தி, காட்டுத்தீயாய் பரவி திருமண வீட்டைப் போர்க்களமாக மாற்றியது.

இந்த வதந்தியைக் கேட்ட மணமகள் வீட்டார் கடும் அதிர்ச்சியடைந்து, தாலி கட்டும் சடங்குகளைப் பாதியிலேயே நிறுத்தினர். அங்கிருந்த முன்னாள் அமைச்சர் சிவ சரண் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றும், மணமகள் தரப்பினர் பிடிவாதமாகத் திருமணத்தை ரத்து செய்தனர். இதனால் பெரும் பொருட்செலவில் ஊர்வலமாக வந்த மணமகன் மற்றும் அவரது உறவினர்கள், மணமகள் இல்லாமல் அவமானத்துடன் வெறுங்கையோடு ஊர் திரும்ப வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.

   

இச்சம்பவம் குறித்து மணமகனின் தந்தை தயாராம் கூறுகையில், தனது மகனுக்கு இது இரண்டாவது திருமணம்தான் என்பதும், முதல் மனைவியை விவாகரத்து செய்த விவரமும் மணமகள் வீட்டாருக்கு முதலிலேயே தெரியும் என்று தெரிவித்தார். மேலும், திருமணச் சடங்குகளின் போது மணமகள் வீட்டார் திடீரென ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டதாகவும், அதைத் தர மறுத்ததால் ‘மூன்றாவது திருமணம்’ என்ற பொய்யான வதந்தியைப் பரப்பி திருமணத்தை நிறுத்திவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஒருபுறம் வதந்தி, மறுபுறம் வரதட்சணை ஆசை என இரு குடும்பங்களுக்கு இடையே வெடித்துள்ள இந்த சர்ச்சை அப்பகுதியில் விவாதப் பொருளாகியுள்ளது.