மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் உலகளாவிய வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘தங்க நகரம்’ என்று அழைக்கப்படும் துபாயில் இதன் தாக்கம் மிகத்தீவிரமாக எதிரொலிக்கிறது. போர் காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, சரக்கு போக்குவரத்து முடங்கியுள்ளதால், துபாயில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய தங்கம் டன் கணக்கில் தேக்கமடைந்துள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலையால் துபாய் சந்தையில் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.
பொதுவாக, துபாயில் இருந்து பயணிகள் விமானங்கள் மூலமாகவே தங்கம் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படும். ஆனால் தற்போதைய போர் சூழலால் விமானங்கள் இயக்கப்படாததால், டீலர்கள் தங்கத்தை இந்தியா போன்ற நாடுகளுக்குக் கொண்டு வர முடியாமல் தவித்து வருகின்றனர். இவ்வாறு தேக்கமடைந்த தங்கத்தைப் பாதுகாப்பாக இருப்பு வைப்பதற்கான செலவுகள் (Storage costs) அதிகரிப்பதாலும், எதிர்கால சந்தை நிலவரம் குறித்த நிச்சயமற்ற தன்மையாலும், வர்த்தகர்கள் கையில் உள்ள இருப்பை எப்படியாவது விற்றுத் தீர்க்க முயன்று வருகின்றனர்.
இதன் விளைவாக, சர்வதேச அளவில் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் அளவுகோலான ‘லண்டன் பெஞ்ச்மார்க்’ விலையை விட, துபாயில் ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு சுமார் 30 அமெரிக்க டாலர்கள் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்திய மதிப்பில் கணக்கிட்டால், இது ஒரு கிராம் தங்கத்திற்கு சுமார் 100 ரூபாய் வரை விலை குறைப்பை ஏற்படுத்தும் என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவை விட ஏற்கனவே துபாயில் தங்கம் விலை குறைவு என்ற நிலையில், இந்த கூடுதல் தள்ளுபடி முதலீட்டாளர்களைக் கவர்ந்து வருகிறது.
இருப்பினும், இந்த விலை குறைப்பு என்பது தற்காலிகமான ஒரு சிக்கலால் உருவானது என நிபுணர்கள் கருதுகின்றனர். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் மேலும் தீவிரமடைந்தால், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நீண்ட கால அடிப்படையில் தங்கத்தின் விலை உலக சந்தையில் ராக்கெட் வேகத்தில் உயர வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலில், ஏற்றுமதி சிக்கல்களால் துபாயில் மட்டும் தங்கம் மலிவாகக் கிடைப்பது சர்வதேச வர்த்தகத்தில் ஒரு விசித்திரமான சூழலை உருவாக்கியுள்ளது.
