தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் புதிய திரைப்படத்தில், தமிழர்களின் முதன்மைக் கடவுளான முருகன் வடமாநிலத்தில் பிறந்தவர் என்பது போலக் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதற்குத் தனது கடுமையான கண்டனத்தையும் எச்சரிக்கையையும் பதிவு செய்துள்ளார்.
முருகன் வடபுலத்தில் பிறந்தார் என்ற வரலாற்றுத் திரிபான கட்டுக்கதையை கலை என்ற ஊடகத்தின் மூலம் திட்டமிட்டுத் திணிக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், இல்லையென்றால் சம்பந்தப்பட்டவர்கள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும், முருகன் என்பவன் தமிழர்களின் தொன்ம அடையாளமும், எங்களது முப்பாட்டனும் ஆவான் என்பதே தமிழர்களின் பிரிக்க முடியாத பண்பாடு என்று தனது அறிக்கையில் சீமான் மிக உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.
