தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்து பல்வேறு யூகங்கள் சிறகடிக்கின்றன. திமுக கூட்டணியில் கதவுகள் மூடப்பட்டதாகக் கருதப்படும் சூழலில், டாக்டர் ராமதாஸ் முன்பாக மூன்று முக்கிய வாய்ப்புகளே எஞ்சியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். தமிழக வெற்றிக் கழகத்துடன் கரம் கோர்ப்பது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பது அல்லது வட மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடுவது ஆகியவையே அந்த வாய்ப்புகள். இதில், தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் வட மாவட்டங்களில் குறைந்தபட்சம் 50 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் முடிவை ராமதாஸ் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்தத் தகவல் பாமக தொண்டர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே.மணி இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது போன்ற செய்திகள் வெறும் யூகங்களே என்றும், கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், மற்ற கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு இழுபறியில் நீடிப்பதால், பாமக தனது ‘வன்னியர் வாக்கு வங்கி’ கோட்டையான வட தமிழகத்தில் தனித்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தால் அது மற்ற பெரிய கட்சிகளின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் காரணியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
