தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2021 தேர்தலின் போது 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுகவுக்கு, இந்த முறை எண்ணிக்கை குறைக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் மதிமுகவுக்கு 5 தொகுதிகளை வழங்க திமுக முன்வந்ததாகவும், ஆனால் அனைத்துத் தொகுதிகளிலும் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை முதல்வர் ஸ்டாலின் விதித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் திமுகவின் இந்த பிடிவாதமான நிபந்தனையே தொகுதி எண்ணிக்கை குறைவதற்குக் காரணமாக அமைந்ததாகத் தெரிகிறது. இதனால் மறுபுறம், மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ, குறைந்தபட்சம் ஒரு தொகுதியிலாவது கட்சியின் சொந்தச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
இந்த உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது கட்சியின் தனித்துவத்தைப் பாதிக்கும் என்று அவர் கருதியதால், நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் மதிமுகவின் தனிச் சின்னத்திலும் போட்டியிட உடன்பாடு எட்டப்பட்டது. சொந்தச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பிடிவாதத்தால், ஒரு தொகுதியைத் தியாகம் செய்து 4 தொகுதிகளை மதிமுக ஏற்றுக்கொண்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
