நடிகர் சூர்யா. 2022-ம் ஆண்டு வெளியான எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு ஒன்றரை ஆண்டுகளாக எந்தப் படமும் வெளியாகவில்லை. ஜெய்பீம் படத்தை தொடர்ந்து அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் தயாரானாலும் பல படங்கள் கிடப்பில் உள்ளது. ஒன்றரை வருடங்களாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் கங்குவா படத்தில் முழு வீச்சில் நடித்து வந்தார் சூர்யா. திஷா பதானி, பாபிதியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிப்பில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படம் 10 மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறினார் நடிகர் சூர்யா. இனி அங்கேயே அவர் செட்டில் ஆகி விடுவார் எனவும், சூட்டிங்கிற்காக மட்டுமே தமிழ்நாடு பக்கம் வருவார் எனவும் கூறப்பட்டது. ஆனால் தனது பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக அங்கே இருப்பதாக நடிகை ஜோதிகா நேர்காணல்களில் கூறியிருந்தார். அதேப் போல தனது மகள் தியா மற்றும் மகன் தேவ் ஆகியோர் மும்பையில் பயின்று வருவதாகவும், அவர்களது படிப்பிற்காக அங்கு இருப்பதாகவும் நடிகர் சூர்யா கூறியிருந்தார். அதேப் போல சில பாலிவுட் வெப் சீரிஸ், பாலிவுட் படங்களில் ஜோதிகா நடிப்பதால், அதற்காகவும் அவர்கள் மும்பையில் முகாமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.
மும்பையில் இருக்கும் சூர்யா, அங்கு சில தொழில் முதலீடுகளை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அங்குள்ள விமான நிலையங்களில் பார்க்கிங் வசதியை அவர் தான் ஏலம் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதேப் போல பாலிவுட்டில் ஒரு புரொடக்ஷன் நிறுவனம் தொடங்க இருப்பதாகவும் கூட கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் தனது சூட்டிங் மற்றும் குழந்தைகளின் படிப்பு ஆகியவை முடிந்த பிறகு மீண்டும் தமிழ்நாடிற்கு வந்து விடுவதாக ஜோதிகா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.