இந்தியப் பெருங்கடலில் ஈரானின் ‘ஐஆர்ஐஎஸ் டேனா’ என்ற போர்க்கப்பலை அமெரிக்கக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தாக்கி மூழ்கடித்த சம்பவம், இரு நாடுகளுக்கு இடையே ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. சர்வதேச கடல் பகுதியில் சுமார் 130 மாலுமிகளுடன் பயணித்த இந்தக் கப்பல் மீது எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில், 100-க்கும் மேற்பட்ட மாலுமிகள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் செயலை ‘கடலில் நடந்த ஒரு கொடூரம்’ என்று வர்ணித்துள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி, அமெரிக்கா தனது இந்த நடவடிக்கைகாகக் கடும் வருத்தப்படும் அளவுக்கு ஈரான் மிகத் தீவிரமான பதிலடியைக் கொடுக்கும் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் மறுபுறம், ஈரானின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் அணுசக்தி திட்டங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டுத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த மோதல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், பென்டகன் தரப்பிலிருந்து இந்தத் தாக்குதல்கள் எத்தனை வாரங்கள் நீடிக்கும் என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் ஈரானியப் படைகளின் தாக்குதல் திறனைக் குறைப்பதே தங்கள் நோக்கம் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினாலும், இந்த நீடித்த போர் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த மோதல் பிராந்திய பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
