ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து வெளியாகியுள்ள தற்போதைய தகவல்கள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அவரது தந்தை அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில், அந்தத் தாக்குதலில் மொஜ்தபா கமேனியும் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது அவர் சுயநினைவின்றி கோமா நிலையில் கோம் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், இதனால் ஈரானின் ஆட்சி அதிகாரத்தை கவனிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் ஈரானின் புதிய சுப்ரீம் லீடராகப் பதவியேற்ற ஒரு மாத காலத்திற்கு மேலாகியும், மொஜ்தபா கமேனி இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை என்பது இந்த சந்தேகங்களை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. இருப்பினும், இந்தத் தகவல்களை ஈரான் அரசு மறுத்துள்ளது.
இதனால் அவர் காயமடைந்திருப்பது உண்மைதான் என்றாலும், அவர் தொடர்ந்து தனது பணிகளைக் கவனித்து வருவதாகவும், போர்ச் சூழலை ஆய்வு செய்து முடிவுகளை எடுத்து வருவதாகவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் உச்ச தலைவரின் உடல்நிலை குறித்த இந்த முரண்பட்ட தகவல்கள் அந்தப் பிராந்தியத்தில் நிலவும் அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.
