அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்தம் பெயரளவில் அமலில் இருந்தாலும், கள நிலவரம் இன்னும் பதற்றமாகவே நீடிக்கிறது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி இரு நாடுகளும் மேற்கொண்டுள்ள கடல்சார் முற்றுகை உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரானின் ஏவுகணைத் திறன்கள் மற்றும் ட்ரோன் உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த ராணுவக் கட்டமைப்பையும் முற்றிலும் அழித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து உரிமை கோரி வருகிறார். ஈரானின் கடற்படை இனி போரிடும் நிலையில் இல்லை என்பதே ட்ரம்பின் வாதமாக உள்ளது.
இருப்பினும், ட்ரம்பின் இந்தக் கூற்றுகளைப் பொய்யாக்கும் வகையில், மும்பையில் உள்ள ஈரானிய சர்வதேச தூதரகம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது. “பாரசீக வளைகுடாவின் சிவப்புத் தேனீக்கள்” என்று பெயரிடப்பட்ட அந்த வீடியோவில், ஈரானின் அதிவேக ஏவுகணைப் படகுகள் அணிவகுத்து நிற்கின்றன. ஈரானின் கடற்படை முடிந்துவிட்டது என்று கூறி வரும் ட்ரம்பிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஒரு சிறிய தேனீக் கூட்டம் எப்படி ஒரு பெரிய யானையை முடக்க முடியுமோ, அதுபோல இந்தச் சிறு படகுகள் அமெரிக்கக் கடற்படையைச் செயலிழக்கச் செய்யும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஈரானிய தூதரகம் பயன்படுத்தியுள்ள பாலிவுட் பாணியிலான “இது வெறும் ட்ரெய்லர் தான், படம் இன்னும் பாக்கி இருக்கிறது” (Abhi toh sirf trailer hai, picture abhi baaki hai) என்ற வாசகம் பெரும் வைரலாகி வருகிறது. இதன் மூலம், அமெரிக்காவிடம் காட்டியதை விட இன்னும் பல மடங்கு நவீன ஆயுதங்கள் மற்றும் தாக்குதல் வியூகங்கள் தங்களிடம் இருப்பதாக ஈரான் மறைமுகமாக உணர்த்தியுள்ளது. வெறும் பேச்சோடு நிற்காமல், தனது ராணுவ பலத்தை வீடியோ ஆதாரத்துடன் நிரூபிக்க ஈரான் முயன்றுள்ளது.
இந்த வீடியோ வெளியீடு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வரும் தகவல்கள் வெறும் அரசியல் பிரச்சாரமே அன்றி உண்மையான நிலவரம் அல்ல என்பதை உலக நாடுகளுக்குக் காட்ட முயல்கிறது. ஈரானின் ஏவுகணைப் படகுகள் மீண்டும் பாரசீக வளைகுடாவில் நடமாடத் தொடங்கியிருப்பது, அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கக் கப்பல்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. ஈரானின் இந்த வெளிப்படையான மிரட்டலுக்கு ட்ரம்ப் தரப்பிலிருந்து அடுத்து என்ன மாதிரியான அதிரடிப் பதில் வரும் என்பதை ஒட்டுமொத்த உலகமும் உற்று நோக்கி வருகிறது.
“Red bees of the #PersianGulf” yeah, the fast missile boats are warming up.
Funny how #Trump kept claiming #Iran’s navy was “finished”… now they’re about to find out how a swarm can pin you down real quick.
Abhi toh sirf trailer hai, picture abhi baaki hai 😏.#HORMUZ pic.twitter.com/Wu0FV5iMIc
— Consulate General of the I.R. Iran in Mumbai (@IRANinMumbai) April 13, 2026
