ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கப் படைகளுக்கு இடையே நிலவி வரும் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மார்ச் 7, 2026 அன்று ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது முதல்முறையாக நேரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலைநகர் தெஹ்ரானின் தெற்குப் பகுதியில் உள்ள முக்கிய எண்ணெய் கிடங்குகள் மற்றும் எரிபொருள் சேமிப்பு முனையங்களை இலக்கு வைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய போர் விமானங்கள் சரமாரித் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலால் அந்தப் பகுதி முழுவதும் பெரும் தீப்பிழம்புகள் எழும்பி, வானத்தையே மறைக்கும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்ததால் தலைநகர் தெஹ்ரானில் பெரும் பரபரப்பு நிலவியது.
#WATCH | ஈரானின் முக்கிய எண்ணெய் கிடங்குகள் மீது பயங்கர தாக்குதல் நடத்திய அமெரிக்க, இஸ்ரேலிய படைகள்!
தலைநகர் தெஹ்ரானில் கிடங்குகள் தாக்கப்பட்டதால் பரபரப்பு.#SunNews | #Iran | #OilDepots | #Israel pic.twitter.com/xF5RsGMx6H
— Sun News (@sunnewstamil) March 8, 2026
இந்தத் தாக்குதலில் தெஹ்ரானின் தெற்குப் பகுதியில் உள்ள ‘ரே’ (Rey) எண்ணெய் கிடங்கு மற்றும் ஷஹ்ரான் (Shahran) பகுதிகளில் உள்ள எரிபொருள் முனையங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளுக்குத் தேவையான எரிபொருள் விநியோகத்தைத் துண்டிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதலால் தெஹ்ரானின் பிரதான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு (Tehran Refinery) நேரடி பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று ஈரான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) இஸ்ரேலின் ‘ஹைஃபா’ (Haifa) பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது. இரு நாடுகளும் ஒருவரது எரிசக்தி மையங்களை மற்றவர் மாறி மாறித் தாக்குவதால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வைச் சந்தித்துள்ளது. போர் மேகங்கள் மேலும் வலுவடைந்து வருவதால், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
