இந்தியக் கடற்படையின் அழைப்பின் பேரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ‘மிலன் 2026’ (Milan 2026) சர்வதேச கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ஈரானின் IRIS Dena என்ற போர்க்கப்பல், மார்ச் 4 அன்று இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது. இலங்கை கடற்பரப்பிற்கு அருகே நடந்த இந்தத் தாக்குதலில் கப்பலில் இருந்த 87 மாலுமிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஈரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே (Saeed Khatibzadeh) இச்சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்திய நண்பர்களின் அழைப்பின் பேரில் ஒரு சர்வதேசப் பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிய அந்தக் கப்பல், எந்தவித ஆயுதங்களும் இன்றி (unarmed) வெறும் சடங்கு ரீதியாகவே வந்ததாக அவர் தெரிவித்தார். போர்க்களத்தில் கடைசி வீரரும் கடைசித் தோட்டாவும் இருக்கும் வரை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஈரான் தொடர்ந்து போராடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியக் கடற்படை உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டது. கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் தகவலின்படி, ‘ஐஎன்எஸ் தரங்கிணி’ (INS Tarangini) மற்றும் கடல்சார் ரோந்து விமானங்கள் தேடுதல் பணிக்காக அனுப்பப்பட்டன. இலங்கை கடற்படையினரும் 32 மாலுமிகளை உயிருடன் மீட்டுள்ளனர். இதற்கிடையில், இந்தத் தாக்குதலுக்கு இந்தியா எந்த வகையிலும் உதவவில்லை என்று இந்தியக் கடற்படை விளக்கம் அளித்துள்ளது.
