மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் ஐந்து கச்சா எண்ணெய் கப்பல்களைத் தங்களது படைகள் தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க கடற்படைக் கப்பலைக் குறிவைத்து, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இரண்டு முறை பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்த முயன்றது. இந்தத் தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே, அமெரிக்கா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் நடத்திய இரண்டு தாக்குதல் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டதாக சென்ட்காம் தனது ‘எக்ஸ்’ (X) பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதல்களிலிருந்து அமெரிக்கப் போர்க்கப்பல் பாதுகாப்பாகத் தப்பித்து, அப்பகுதியில் தொடர்ந்து தனது ரோந்துப் பணியை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்தச் சம்பவத்தில் அமெரிக்க வீரர்கள் எவருக்கும் எவ்வித காயமோ அல்லது பாதிப்போ ஏற்படவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஓமன் வளைகுடாப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ‘எம்/டி காவிஸ்’ (M/T Kaviz), ‘எம்/டி சர்மினார்’ (M/T Charminar), ‘எம்/டி ஹரைசன் 1’ (M/T Horizon 1) மற்றும் ‘எம்/டி ரீஸ்கோ’ (M/T Riesco) ஆகிய நான்கு எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தகர்த்தன. இவற்றுடன் கார்க் தீவுக்கு அருகே பயணித்த ‘எம்/டி தர்யா’ (M/T Derya) என்ற கப்பலும் சேர்த்து மொத்தம் ஐந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் முற்றிலுமாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.
தாக்கப்பட்ட இந்தக் கப்பல்கள் அனைத்தும் IRGC மற்றும் அதன் பிராந்தியப் படைகளுக்குப் பல பில்லியன் டாலர் நிதி திரட்டித் தரும் சட்டவிரோத நிழல் வலையமைப்பின் (Shadow Network) ஒரு பகுதியாகச் செயல்பட்டு வந்ததாக சென்ட்காம் சுட்டிக்காட்டியுள்ளது. முன்னதாக, செப்டம்பர் 5 அன்றும் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டு, அவர்களின் மூன்று எண்ணெய் கப்பல்கள் அழிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஐந்து கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
