அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (FBI) இயக்குநர் காஷ் படேலின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கை ஈரான் ஹேக்கர்கள் ஊடுருவித் தாக்கியுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘ஹண்டாலா ஹேக் டீம்’ (Handala Hack Team) என்ற பெயரிலான ஹேக்கர் குழு, காஷ் படேலின் மின்னஞ்சல் கணக்கிற்குள் புகுந்து, கடந்த 2010 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் அவர் மேற்கொண்ட தகவல் பரிமாற்றங்களைத் திருடி வெளியிட்டுள்ளது. மிக உயரிய பாதுகாப்பு அமைப்பின் தலைவரே சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது அமெரிக்கப் பாதுகாப்புத் துறைக்குச் சவாலாக மாறியுள்ளது.
இந்த ஊடுருவலின் போது காஷ் படேலின் தனிப்பட்ட மற்றும் அலுவல் ரீதியான மின்னஞ்சல்களின் மாதிரிகள், அவரது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பயோடேட்டா போன்ற முக்கிய ஆவணங்களை ஹேக்கர்கள் இணையத்தில் கசியவிட்டுள்ளனர். காஷ் படேலின் மின்னஞ்சல்கள் திருடப்பட்டிருப்பதை அமெரிக்க நீதித்துறை அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், இந்த விவகாரம் குறித்து எஃப்.பி.ஐ தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக விரிவான கருத்துகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்காவின் புலனாய்வுத் துறைத் தலைவரையே குறிவைத்து இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த மின்னஞ்சல் கசிவு அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான தகவல்களைத் தாண்டி, அரசு ரீதியான முக்கியத் தரவுகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்குமோ என்ற கவலை எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் உலக நாடுகளுக்கு இணையப் பாதுகாப்பு (Cyber Security) குறித்த ஒரு பகீர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
