“ஈரான் இனி அணு ஆயுதம் தயாரிக்காது” டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு… ஆனால் 24 பில்லியன் டாலர் சொத்துக்களுக்கு என்ன பதில்..?

By Soundarya on ஆனி 16, 2026

Spread the love

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல மாதங்களாக நீடித்து வந்த போர் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உடன்படிக்கை தற்காலிகமாக மின்னணு முறையில் கையெழுத்தாகியுள்ளது. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயல்வதாகக் கூறி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கடந்த பிப்ரவரி மாதம் அந்நாட்டின் மீது தாக்குதலைத் தொடங்கின. இதற்குப் பதிலடியாக ஈரானும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதுடன், முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் உலகளவில் கடுமையான எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டது.

இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, ஈரான் இனி ஒருபோதும் அணு ஆயுதங்களை தயாரிக்க மாட்டோம் என்று உறுதியளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், இந்த ஒப்பந்தத்திற்கு ஈடாக அமெரிக்கா ஈரானுக்கு 300 மில்லியன் டாலர் பணம் வழங்கவுள்ளதாக வெளியான தகவல்களை டிரம்ப் முற்றிலும் மறுத்துள்ளார். எனினும், போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள தங்களது 24 பில்லியன் டாலர் சொத்துக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் ஈரான் தரப்பில் தொடர்ந்து கோரப்பட்டு வருகிறது.

   

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை விளக்கியுள்ளார். அதன்படி, ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை அழிக்கவும், அதன் அணுசக்தித் திட்டங்களை அமெரிக்க கண்காணிப்பின் கீழ் கொண்டு வரவும் ஒப்புக்கொண்டுள்ளது. சர்வதேச அணுசக்தி முகமை அதிகாரிகள் மீண்டும் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஈரான் தனது வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றினால் மட்டுமே அதன் மீதான பொருளாதார மற்றும் எண்ணெய் ஏற்றுமதி தடைகள் படிப்படியாக நீக்கப்படும் என்றும் அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.