“ஜாக்கிரதை டிரம்ப்.. நீங்களே ஒழிக்கப்படலாம்”…. அமெரிக்க அதிபரை அதிரவைத்த ஈரானின் நேரடி எச்சரிக்கை… உலக நாடுகளுக்கு வந்த புது சிக்கல்..!

By Nanthini on பங்குனி 11, 2026

Spread the love

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் விநியோகத்தை ஈரான் தடுக்க முயன்றால், அந்த நாடு ஒருபோதும் மீண்டெழ முடியாத அளவுக்கு இருபது மடங்கு கடுமையான தாக்குதலை அமெரிக்கா தொடுக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார். ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டதற்கும் டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, அவர் நிம்மதியாக வாழ முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

டிரம்ப்பின் இந்த மிரட்டலுக்கு ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி தற்போது பதிலடி கொடுத்துள்ளார். “உங்களை விட பெரியவர்களால் கூட ஈரானை ஒழிக்க முடியவில்லை; நீங்களே ஒழிக்கப்படலாம், கவனமாக இருங்கள்” என்று அவர் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் உள்நாட்டு விவகாரங்களிலும், புதிய தலைவர் தேர்விலும் அமெரிக்காவின் தலையீடு இருக்க வேண்டும் என்ற டிரம்ப்பின் பிடிவாதமான போக்கே இந்த வார்த்தைப் போருக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

   

இந்த அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் போன்ற நகரங்களில் அபாய எச்சரிக்கை ஒலிகள் முழங்கி வருகின்றன. ஈரானின் தாக்குதல்களை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் வானிலேயே தடுத்து அழித்து வரும் சூழலில், மத்திய கிழக்கில் போர் மேகங்கள் மேலும் சூழ்ந்துள்ளன.

   

தொடர்ச்சியான இந்த மோதல்கள் சர்வதேச அளவில் பெரும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளின் வர்த்தகம் ஆட்டம் கண்டுள்ள நிலையில், அமெரிக்கா-ஈரான் இடையிலான இந்த மோதல் உலகப் பொருளாதாரத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.