“எங்க வெச்சோம்னே தெரியல”… சொந்த கண்ணிவெடியையே தேடும் ஈரான்… அமெரிக்கா போட்ட நிபந்தனையால் வந்த விபரீதம்….!

By Nanthini on சித்திரை 11, 2026

Spread the love

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பதில் ஈரான் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் இந்த நீரிணையை மூடி கடலில் கண்ணிவெடிகளைப் பதித்தது. தற்போது இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், இந்த வழியாகக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. இருப்பினும், ஈரான் இன்னும் மௌனம் காப்பது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.

ஈரானின் இந்தத் தயக்கத்திற்குப் பின்னால் ஒரு வினோதமான மற்றும் ஆபத்தான காரணம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, கடலில் தாம் வைத்த கண்ணிவெடிகள் தற்போது எங்கு இருக்கின்றன என்பதைக் கண்டறிய முடியாமல் ஈரான் திணறி வருவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானியப் படைகள் அவசர அவசரமாகச் சிறிய படகுகள் மூலம் சீரற்ற முறையில் கண்ணிவெடிகளைப் பதித்ததால், அவற்றைத் துல்லியமாக டிராக் செய்ய (Track) முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அந்தப் பாதையைத் திறந்தால் தற்செயலாகத் தனது நாட்டின் கப்பல்களோ அல்லது மற்ற வணிகக் கப்பல்களோ விபத்துக்குள்ளாகும் என்ற அச்சம் ஈரானுக்கு ஏற்பட்டுள்ளது.

   

குறிப்பாக, ஈரான் பயன்படுத்திய சில கண்ணிவெடிகள் கடலின் நீரோட்டத்திற்கு ஏற்ப மிதந்து செல்லக்கூடியவை (Drifting mines) என்பதால், அவை நிலைபெற்ற இடத்திலிருந்து வெகுதூரம் நகர்ந்து சென்றுவிட்டதாகக் கருதப்படுகிறது. இதனால் ஜலசந்தியைப் பாதுகாப்பாகத் திறப்பது ஈரானுக்கே பெரும் சவாலாக மாறியுள்ளது. உலக எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு இந்த வழித்தடத்தைச் சார்ந்திருப்பதால், இங்கு நிலவும் போக்குவரத்துத் தடை உலகெங்கும் எரிபொருள் விநியோகத்தைப் பாதித்து விலை ஏற்றத்திற்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது. இதனிடையே, ஈரானின் முரண்டு பிடிக்கும் போக்கைத் தொடர்ந்து, அமெரிக்காவே நேரடியாகத் தலையிட்டு ஜலசந்தியைத் திறக்கப் போவதாகவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

   

இந்தச் சூழலில், பாகிஸ்தானில் இன்று நடைபெறவுள்ள அமெரிக்க – ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தலைமையிலான குழுவினர் பங்கேற்கும் இந்தப் பேச்சுவார்த்தையில், ஈரான் தனது அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பது முதன்மை நிபந்தனையாக வைக்கப்பட்டுள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாவிட்டால், இதுவரை இல்லாத அளவிலான பெரும் தாக்குதலைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை, மத்திய கிழக்குப் பகுதியில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.