மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகின் மிக முக்கியமான எரிசக்தி போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் மூடிவிடுவோம் என ஈரான் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தியதைத் தொடர்ந்து, இந்த நீரிணை அனைத்து சரக்கு கப்பல்களுக்கும் திறக்கப்படுவதாக ஈரான் நேற்று அறிவித்திருந்தது. ஆனால், ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை தொடர்ந்து முடக்கி வைத்தால் (Blockade), இந்த நீரிணை வழியாக எந்தக் கப்பலும் செல்ல அனுமதிக்கப்படாது என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட தகவல்களைப் பொய் என்று சாடியுள்ள காலிபாப், ஈரானின் இறையாண்மையை உரசிப் பார்க்கும் செயல்கள் தொடர்ந்தால் ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு ஈரான் வசம் மட்டுமே இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். நேற்று இரவு மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட கப்பல்கள் இந்த நீரிணையை கடக்க முடியாமல் மீண்டும் திரும்பிச் சென்றது உலக வர்த்தக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் இந்த பிடிவாதமான நிலைப்பாடு, எரிபொருள் விலையேற்றம் குறித்த அச்சத்தை உலக நாடுகளிடையே மீண்டும் விதைத்துள்ளது.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் ஈரான் ஏழு முக்கிய வாக்குறுதிகளை அளித்ததாக டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டிருந்தார். இதனை முற்றிலுமாக மறுத்துள்ள காலிபாப், இதுபோன்ற பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் அமெரிக்கா போரில் வெற்றி பெற முடியாது என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான சுமுகமான பேச்சுவார்த்தைக்கு இச்செயல்கள் முட்டுக்கட்டையாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதார மற்றும் ராணுவ முடக்கத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்பதே ஈரானின் தற்போதைய பிரதான கோரிக்கையாக உள்ளது.
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டால் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், சர்வதேச நாடுகள் இப்பாதையைத் திறக்க கோரிக்கை விடுத்து வருகின்றன. குறிப்பாக, பாகிஸ்தான் தலைமையில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தற்போதைய மோதல் போக்கினால் கேள்விக்குறியாகியுள்ளது. அமெரிக்கா தனது முடக்கத்தை நீக்க மறுப்பதும், ஈரான் நீரிணையை மூடுவதாக எச்சரிப்பதும் உலகப் பொருளாதாரச் சந்தையில் ஒரு புதிய சவாலை உருவாக்கியுள்ளது.
