மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள் உலக நாடுகளை உற்று நோக்கச் செய்துள்ளன. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு ஓரளவுக்குத் தணிந்து, பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்ட நிலையில், ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதாக அறிவித்தது. இருப்பினும், இப்பகுதியில் அமெரிக்கப் போர்க்கப்பல்களின் நடமாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஈரான் திடீரென இந்த கடல்வழிப் பாதையை மீண்டும் மூடியதுடன், அங்கு வரும் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பதற்றமான சூழலில், இந்தியாவிற்குச் சொந்தமான நான்கு பிரம்மாண்ட கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி அருகே வந்தபோது, பாதுகாப்பு கருதி திடீரென ‘யூ-டர்ன்’ அடித்துத் திரும்பியுள்ளன. இந்தியக் கப்பல் கழகத்திற்குச் சொந்தமான ‘தேஷ் வைபவ்’, ‘தேஷ் விபூர்’ மற்றும் சன்மார் ஷிப்பிங் நிறுவனத்தின் ‘சன்மார் ஹெரால்டு’ ஆகிய மூன்று கச்சா எண்ணெய் கப்பல்களும், கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங் நிறுவனத்தின் ‘ஜாக் அர்னவ்’ என்ற சரக்கு கப்பலும் இதில் அடங்கும். ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலுக்கு அஞ்சி, இந்த கப்பல்கள் நடுவழியில் திரும்பியதை பிரிட்டன் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் பிரிவு (UKMTO) உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது இந்த நான்கு கப்பல்களையும் சேர்த்து, பெர்ஷியன் வளைகுடா பகுதியில் இந்தியக் கொடியுடன் நடுக்கடலில் தவிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிற்கு வர வேண்டிய கச்சா எண்ணெய் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றிய கப்பல்கள் இவ்வாறு முடங்கியிருப்பது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வணிகத்தைப் பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கையும், இந்தியக் கப்பல்கள் மீதான அச்சுறுத்தலும் மத்திய அரசை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
இதன் எதிரொலியாக, டெல்லியில் உள்ள ஈரான் தூதர் முகமது ஃபதாலியை நேரில் அழைத்து மத்திய வெளியுறவுத்துறை சம்மன் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், இந்த இக்கட்டான சூழலிலும் ‘தேஷ் கரிமா’ என்ற இந்தியக் கச்சா எண்ணெய் கப்பல் மட்டும் வெற்றிகரமாக ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து ஓமன் வளைகுடாவை அடைந்துள்ளது ஆறுதல் தரும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்தப் பாதையை பாதுகாப்பாகக் கடந்த 10-வது இந்தியக் கப்பல் இதுவாகும். இருப்பினும், எஞ்சியுள்ள கப்பல்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.
