ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் சர்வதேச அளவில் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பிறப்பித்துள்ள புதிய உத்தரவு உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக இரு நாடுகளுக்கும் இடையே பாகிஸ்தானின் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதில், ஈரான் வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைத்தால் மட்டுமே போரை நிறுத்த முடியும் என்று அமெரிக்கா பிடிவாதம் காட்டி வந்தது. இந்தச் சூழலில், ஈரானில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எக்காரணம் கொண்டும் வெளிநாட்டுக்கு அனுப்பக் கூடாது என மொஜ்தபா கமேனி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
ஈரான் உச்ச தலைவரின் இந்த பிடிவாதமான நிலைப்பாடு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மத்தியஸ்தராகச் செயல்பட்ட பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுடன் எந்தவொரு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானாலும், ஒரு கிராம் யுரேனியத்தைக் கூட நாட்டின் எல்லையைத் தாண்டி வெளியில் அனுப்ப முடியாது என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. அதேநேரம், ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் செய்ய வேண்டுமானால் அதன் உயர் செறிவு யுரேனியம் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும் என்பதை இஸ்ரேலும் ஒரு கட்டாய நிபந்தனையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மொஜ்தபா கமேனியின் இந்த அதிரடி அறிவிப்பு, ஏற்கனவே ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-ஐ கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஈரானை முழுமையாகச் சரணடைய வைக்க வேண்டும் அல்லது தங்களுக்குச் சாதகமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. தவறும்பட்சத்தில் அடுத்தகட்டமாக ஈரானுக்கு எதிராகக் கடுமையான ராணுவ நடவடிக்கையில் இறங்க அமெரிக்கா தயாராகி வருவதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் நகர்வுகளின் தாக்கம் உலகப் பொருளாதாரச் சந்தையில் உடனடியாகப் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஒரு பேரலுக்கு 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால் நாடுகள் கவலையடைந்துள்ளன. பாகிஸ்தானின் பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை ஈரான் வெளியுறவு அமைச்சகம் பரிசீலித்து வந்த வேளையில், உச்ச தலைவரின் இந்த அதிரடி உத்தரவு ஒட்டுமொத்தப் பேச்சுவார்த்தையையும் முடக்கி, உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
