ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள மினாப் (Minab) நகரில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் நடத்தியதாகக் கூறப்படும் ஏவுகணைத் தாக்குதலில் 165 பள்ளி மாணவிகள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதல் பிப்ரவரி 28, 2026 அன்று ‘ஷஜாரே தய்யேபா’ (Shajareh Tayyebeh) என்ற பெண்கள் தொடக்கப் பள்ளி மீது நடத்தப்பட்டது. இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த மாணவிகளை அடக்கம் செய்வதற்காகத் தோண்டப்பட்ட நூற்றுக்கணக்கான குழிகளின் புகைப்படத்தை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர், “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாக்களித்த ‘மீட்பு’ (Rescue) என்பது உண்மையில் இப்படித்தான் இருக்கிறது” என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 7 முதல் 12 வயது வரையிலான அந்தப் பிஞ்சு மாணவிகளின் உடல்கள் இந்தத் தாக்குதலில் சிதறிப்போனதாகவும், காசா முதல் மினாப் வரை அப்பாவி மக்கள் இரக்கமின்றி கொல்லப்படுவதாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் மேலும் 96 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மினாப் நகரில் நடந்த இந்த மாணவிகளின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். ஈரானின் புரட்சிகரக் காவல் படைத் தளத்திற்கு அருகிலேயே இந்தப் பள்ளி அமைந்திருந்ததால், இலக்கு தவறி இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் எனச் சொல்லப்பட்டாலும், ஐநா மற்றும் யுனெஸ்கோ (UNESCO) அமைப்புகள் கல்வி நிறுவனங்கள் மீதான இத்தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிய செயல் என மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
