உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியிலான போக்குவரத்தை ஈரான் துண்டித்துள்ள நிலையில், தற்போது சில நிபந்தனைகளுடன் கப்பல்களை அனுமதிக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பிறகு, இந்த வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது. இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவானது.
தற்போது ஈரான் விதித்துள்ள புதிய நிபந்தனையின்படி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் எண்ணெய் கப்பல்கள் கச்சா எண்ணெய்க்கான வர்த்தகத்தை அமெரிக்க டாலருக்குப் பதிலாக சீனாவின் யுவான் (Yuan) மதிப்பில் மேற்கொள்ள வேண்டும். ஈரானுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் சீனாவிற்குப் பொருளாதார ரீதியாகப் பலம் சேர்க்கவும், அமெரிக்காவிற்கு வர்த்தக ரீதியாக நெருக்கடி கொடுக்கவும் இந்த அதிரடி முடிவை ஈரான் எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது. டாலர் ஆதிக்கத்தைத் தவிர்ப்பதற்காக ஏற்கனவே ஈராக் மற்றும் லிபியா போன்ற நாடுகள் எடுத்த முயற்சிகளுக்கு எதிராக அமெரிக்கா செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இந்திய அரசின் வெளியுறவுத் துறை மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பலனாக, இந்தியக் கொடி ஏந்திய கப்பல்களுக்கு ஈரான் சிறப்பு விலக்கு அளித்துள்ளது. அதன்படி, ‘புஷ்பக்’ (Pushpak) மற்றும் ‘பரிமல்’ (Parimal) ஆகிய இரண்டு இந்திய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் தொடர்பான கப்பல்களுக்குத் தொடர்ந்து தடைகளும் அச்சுறுத்தல்களும் நீடிக்கின்றன.
