அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில், ஈரானை முழுமையாக அழித்துவிடுவோம் என்றும், உடனடியாகப் பேச்சுவார்த்தைக்குத் திரும்பாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார். டிரம்பின் இந்த மிரட்டலுக்கு அடுத்த நாளே பதிலடி கொடுக்கும் வகையில் உரையாற்றிய ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதாகவும், எந்தச் சூழலிலும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஈரான் மண்டியிடாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தன் உரையின் போது போரின் கொடூரத்தைச் சுட்டிக்காட்டிய பெசஷ்கியான், பிப்ரவரி 28 அன்று ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள ‘ஷாஜரே தாயெபே’ தொடக்கப் பள்ளி மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலின் புகைப்படங்களை சர்வதேசப் பிரதிநிதிகளிடம் காட்டினார். இந்தத் தாக்குதலில் 120-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாகக் குறிப்பிட்ட அவர், கொல்லப்பட்ட மாணவர்கள் மற்றும் மறைந்த உச்சத் தலைவர் அலி கமேனியின் புகைப்படங்களைக் கையில் ஏந்தித் தனது வேதனையைப் பதிவு செய்தார். ஈரான் மீதான தாக்குதல்கள் தற்காப்புக்கான நடவடிக்கைகளே தவிர, ஈரான் ஒருபோதும் பயங்கரவாதத்தைப் பரப்பவில்லை என்றும், தங்களை வலுக்கட்டாயமாகப் போருக்குள் தள்ளியபோதும் ஈரான் உறுதியுடன் எதிர்த்து நிற்பதாகவும் கூறினார்.
மேலும், உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கட்டுப்படுத்தும் முக்கிய நீர்வழிப் பாதையான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ குறித்தும் அவர் பேசினார். இந்தச் சர்வதேசப் பாதையால் அனைத்து நாடுகளும் பயனடையும் போது, ஈரானியக் கப்பல்களுக்கு மட்டும் தடை விதிப்பது எந்த வகையில் நியாயமாகும் என்று கேள்வி எழுப்பினார். இஸ்ரேல் தொடர்ந்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்த போதிலும், ஈரான் மீதே பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், அமெரிக்காவின் சுயநலப் போக்கால் ஒட்டுமொத்த ஈரானிய மக்களும் பலிகடா ஆக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார்.
தனது உரையின் இறுதியில் அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டு எச்சரித்த பெசஷ்கியான், “மிஸ்டர் டிரம்ப் மற்றும் எங்களை மிரட்ட நினைப்பவர்கள் ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்; பலவந்தமாக எங்கள் மீது எதையும் திணிக்க முடியாது” என்று முழங்கினார். ஈரான் ஒருபோதும் சரணடையாது என்பதைத் தெளிவுபடுத்திய அதேவேளையில், போரை முடிவுக்குக் கொண்டு வரவும், சமரசம் மற்றும் ராஜதந்திர வழியிலான பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் எப்போதும் தயாராகவே உள்ளது என்பதையும் உலக அரங்கில் அவர் வெளிப்படுத்தினார்.
