அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அதனை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க அந்நாடு ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். ஆனால், இந்தத் தகவலை மறுத்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பகேய், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எந்த இடத்திற்கும் மாற்றப்போவதில்லை என்றும், அத்தகைய ஒரு விஷயம் பேச்சுவார்த்தையிலேயே இடம்பெறவில்லை என்றும் அரசு தொலைக்காட்சியில் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஈரானின் கூற்றுப்படி, சமீபத்திய பேச்சுவார்த்தைகள் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளன. ஈரான் முன்வைத்துள்ள 10 முக்கிய கோரிக்கைகளில், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்குவது மற்றும் போர் சேதங்களுக்கான இழப்பீடு பெறுவது ஆகியவையே முதன்மையானவை. இருப்பினும், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் விட்டுக்கொடுத்தால், முடக்கி வைக்கப்பட்டுள்ள 20 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை விடுவிக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிதி மற்றும் பொருளாதார நலன்களுக்கும், அணுசக்தி கொள்கைக்கும் இடையே ஒரு பெரும் இழுபறி நீடிக்கிறது.
கடல்சார் வர்த்தகப் பாதையான ஹார்மஸ் நீர்வழிப்பாதையை மையமாக வைத்தும் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரானிய வணிகக் கப்பல்களை முடக்கப்போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதற்குப் பதிலடியாக, ஈரானிய துறைமுகங்கள் முடக்கப்பட்டால் ஹார்மஸ் நீர்வழிப்பாதையை மீண்டும் மூடுவோம் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து ஈரானின் அங்கீகாரத்துடனேயே நடைபெறும் என்பதையும் அவர் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
இந்தத் தொடர் மோதல்களால் சர்வதேச சந்தையில் சுமார் 500 மில்லியன் கச்சா எண்ணெய் பேரல்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. நவீன வரலாற்றிலேயே எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு இதுவெனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்தாலும், கள யதார்த்தத்தில் இரு நாடுகளும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், இந்த ராஜதந்திரப் போர் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
