“உலகிற்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து?”…. அமெரிக்கா கைகழுவிய அந்த ஒரு விஷயம்… பதறும் உலக நாடுகள்….!

By Nanthini on ஆடி 13, 2026

Spread the love

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் கடுமையான மோதல் வெடித்துள்ளது. இதன் எதிர்விளைவாக, அமெரிக்காவின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஈரான் சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா நடத்திய தாக்குதலால் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, சர்வதேச நாடுகளின் தலையீட்டால் பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவானது. ஆனால், தற்போது ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டி அமெரிக்கா மீண்டும் தாக்குதலைத் தொடுத்துள்ளது. இதற்குப் பதிலடியாக ஈரான் தீவிரத் தாக்குதலில் இறங்கியுள்ளதால், ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பகுதியும் தற்பொழுது பெரும் பதற்றத்தில் மூழ்கியுள்ளது.

இந்த மோதலின் உச்சகட்டமாக, சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் முழுமையாக மூடியுள்ளது. வழக்கமாக இதுபோன்ற நெருக்கடி காலங்களில் அமெரிக்கா தலையிட்டு இந்த கடல் வழித்தடத்தைத் திறப்பது வழக்கம். ஆனால், இந்த முறை “ஹார்முஸ் நீரிணை தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை” என்று அமெரிக்கா கைவிரித்துள்ளதுடன், அதே வேளையில் அந்தப் பகுதியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த அதிகாரப் போட்டியால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் சப்ளை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, உலக சந்தையில் கச்சா எண்ணெய்க்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

   

மத்திய கிழக்கின் இந்த அசாதாரண சூழல் இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலைகள் உச்சத்தில் இருக்கும் நிலையில், தற்போதைய கச்சா எண்ணெய் தட்டுப்பாடு எரிபொருள் விலை மேலும் உயர்வதற்கே வழிவகுக்கும். இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பினால் மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியும் என்ற போதிலும், தற்போதைய சூழலில் அமெரிக்கா அதற்கு முன்வருவதோ அல்லது ஈரான் பின்வாங்குவதோ சாத்தியமில்லாத ஒன்றாகவே தெரிகிறது. இதனால், இந்தியாவில் நுகர்வோருக்கு எரிபொருள் விலை குறைய வாய்ப்பே இல்லை என்பதுடன், வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்கும் என்ற கவலையும் எழுந்துள்ளது.