பாகிஸ்தானில் நடைபெற்ற ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான 21 மணி நேர நீண்ட அமைதி பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிவடைந்தது. ஒரு வார கால தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இடையே, ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தலைமையிலான குழுக்கள் இந்த ஆலோசனையில் ஈடுபட்டன. விடிய விடிய நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் தத்தமது நிலைப்பாடுகளில் உறுதியாக இருந்ததால், போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா அல்லது மீண்டும் போர் தீவிரமடையுமா என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
பேச்சுவார்த்தை தோல்வி குறித்து ஈரான் தரப்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை. “போர்க்களத்தில் எதையெல்லாம் அமெரிக்காவால் சாதிக்க முடியவில்லையோ, அதையெல்லாம் பேச்சுவார்த்தை மேஜையில் கேட்டுப் பெற அமெரிக்கா முயல்கிறது” என்று ஈரான் அதிருப்தி தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்திலும், நாட்டின் இறையாண்மை சார்ந்த கோரிக்கைகளிலும் அமெரிக்கா காட்டிய பிடிவாதம் பேச்சுவார்த்தை முறிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது என ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
மறுபுறம், அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் ஈரானின் அணு ஆயுதக் கொள்கையைச் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்காது என்பதற்கான எவ்வித உறுதிப்பாட்டையும் வழங்க முன்வரவில்லை என்றும், அமெரிக்காவின் பாதுகாப்பு நிபந்தனைகளை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். அணு ஆயுதக் கருவிகளைத் தேடுவதை நிறுத்த ஈரான் ஒப்புக்கொள்ளாத வரை, அடுத்தகட்ட நகர்வு சவாலாகவே இருக்கும் என்பதை அமெரிக்கத் தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில், டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அடுத்தகட்டமாக ஈரான் மீது எத்தகைய ராணுவ நடவடிக்கைகளை எடுக்கும் என்பது சர்வதேச அளவில் பெரும் கேள்வியாக உருவெடுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள சூழலில், இந்தப் போர் பதற்றம் உலகளாவிய தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். அடுத்த சுற்று பேச்சுவார்த்தை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லாததால், மத்திய கிழக்கு பிராந்தியம் மீண்டும் ஒரு போர்க்களமாக மாறும் சூழல் நிலவுகிறது.
