திருச்சியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பிரதமர் மோடிக்கு இளைஞர்கள் மீது மிகுந்த அக்கறை உள்ளது என்றும் தெரிவித்தார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், அணை கட்ட அனுமதி இல்லை என்ற போதிலும் இதனை மீண்டும் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்களில் மாணவர்கள் போர்வையில் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகள் ஊடுருவி அமைதியைச் சீர்குலைக்க முயல்வதாக அவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். வங்கதேசத்தில் நடந்தது போன்ற வன்முறைகளை உருவாக்க உலக நாடுகளின் சதி நடப்பதாகவும், பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுவதும், தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் நிலைப்பாடும் ஒன்றாகவே உள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.
நீட் தேர்வு விவகாரத்தில் நிலவும் குளறுபடிகளைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் வேளையில், நீட் தேர்வே வேண்டும் என்பதே மத்திய அரசின் தெளிவான நிலைப்பாடு என அவர் உறுதியளித்தார். எனவே, நீட் தேர்வுக்காக டெல்லியில் போராடும் மாணவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், மாணவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் என்றும், மாணவர்கள் அல்லாத பிற போராட்டக்காரர்களையும் எதிர்க்கட்சிகளையும் மத்திய அரசு பார்த்துக்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
