அண்ணன் வலது கரம் யார்?…. பனையூரில் வெடித்த உச்சக்கட்ட உட்கட்சி மோதல்…. மாஜிக்களுக்குப் பின் புதிய கட்சியில் வெடிக்கும் பனிப்போர்….!

By Nanthini on ஐப்பசி 21, 2026

Spread the love

தமிழக அரசியலில் தற்போதைய நிலவரப்படி, தேர்தல் வெற்றிகளுக்கு அப்பால் கட்சிகளுக்குள் நடக்கும் உட்கட்சி மோதல்களே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. குறிப்பாக, முன்னாள் ஆளுங்கட்சியில் தலைமைப் பதவியைக் குறிவைத்து மாஜிக்களுக்கு இடையே நடக்கும் கோஷ்டி பூசலும், அடிதடிகளும் அக்கட்சியை ஸ்தம்பிக்க வைத்துள்ளன. மறுபுறம், புதிதாகக் களம் கண்டுள்ள கட்சியின் நிலைமையும் அதிலிருந்து பெரிதும் மாறுபட்டதாக இல்லை. ஆட்சியிலும் கட்சியிலும் யார் பலமானவர்கள் என்ற அதிகாரப் போட்டியும், கோஷ்டி மோதல்களும் அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பி வருகின்றன.

புதிதாகத் தொடங்கப்பட்ட அக் கட்சியின் உச்சத்தில் நடக்கும் பனிப்போர், ‘அண்ணனின் வலது கரம்’ யார் என்ற கேள்வியை மையமாகக் கொண்டுள்ளது. தலைவருக்கு நெருக்கமாக இருக்கும் ‘ஆரோக்கியமானவர்’ மற்றும் நீண்டகாலமாக ‘நம்பர் டூ’வாக வலம் வரும் ‘ஆனந்தம்’ ஆனவர் இடையே யார் அதிகாரம் செலுத்துவது என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. தலைவர் நம்பும் ஐடியாக்களால் கட்சிக்கும் ஆட்சிக்கும் பாதகமான சூழல் ஏற்படுவதாகப் புலம்பும் தரப்பினர், தனித்து வலம் வரத் தொடங்கியுள்ளனர். மாவட்ட அளவிலும் இதே நிலை நீடிப்பதால் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

   

கட்சியைக் கட்டிக் காப்பாற்றியவர்களை மதிக்காமல் அதிகாரத்திலிருப்பவர்கள் தான்னிச்சையாகச் செயல்படுவதாகவும், மறுபுறம் கட்சிப் பதவிகளை வைத்துச் சில மாவட்ட செயலாளர்கள் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி எனத் தனித்தனி கோஷ்டிகள் உருவாகி மாவட்ட செயலாளர்களுக்கு எதிராகக் களம் இறங்கியிருப்பதால் உட்கட்சி குழப்பம் உச்சத்தை எட்டியுள்ளது. ஆட்சியிலும் கட்சியிலும் நாளுக்கு நாள் பூசல்கள் அதிகரிப்பதால் தலைவர் கடும் கோபத்தில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.