ரூ.21 கோடி நகைக்கடை கொள்ளையில் மெகா ட்விஸ்ட்… ! இன்ஸ்டா பிரபலம் மீனாட்சியும், கொள்ளையனின் தந்தையும் சிறையில் அடைப்பு… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

By Devi Ramu on கார்த்திகை 15, 2026

Spread the love

மதுரை பழங்காநத்தம்-காளவாசல் பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் நகைக்கடையில் ரூ.21 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி மற்றும் முக்கியக் குற்றவாளி நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கடந்த 12-ம் தேதி அதிகாலை உடல் முழுவதும் கருப்புத் துணி மற்றும் முகமூடி அணிந்து வந்த வாலிபர், கடையின் பின்புறம் இருந்த இரும்புச் சாரம் வழியாக ஏறி லிப்ட் பாதை வழியாக உள்ளே இறங்கித் துணிகரமாக நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பினார்.

சிசிடிவி காட்சிகள் மற்றும் கடை திறக்கப்பட்ட நாளில் இருந்து 3 முறை மாறுவேடத்தில் வந்து நோட்டமிட்டதை வைத்து விசாரணை நடத்திய போலீசார், கொள்ளையில் ஈடுபட்டது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமான மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த நிஷாந்த் (25) என்பதை உறுதி செய்தனர். போலீசார் தனது வீட்டில் சோதனை நடத்தியதை அறிந்து செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டுத் தலைமறைவான நிஷாந்தை பொள்ளாச்சி, திருப்பூர், சென்னை உள்ளிட்ட இடங்களுக்குத் தனிப்படை போலீசார் விரட்டித் தேடி வருகின்றனர்.

   

இதற்கிடையே, நிஷாந்தின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில், அவரது காதலியும் சக இன்ஸ்டாகிராம் பிரபலமுமான மீனாட்சி (23) என்பவரிடம் அவர் பேசியது தெரியவந்தது. மீனாட்சியிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், கொள்ளையடித்த நகைகளில் 6 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை வீட்டிலும், மாடக்குளம் கண்மாய் கரையிலும் பதுக்கி வைத்திருப்பதாக நிஷாந்த் தன்னிடம் கூறிச் சென்ற அதிர்ச்சித் தகவலை அவர் அம்பலப்படுத்தினார்.

   

இதையடுத்து மீனாட்சியை நேரில் அழைத்துச் சென்ற போலீசார், அவர் அடையாளம் காட்டிய இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கிலோ நகைகளை அதிரடியாக மீட்டனர். இவ்வளவு பெரிய கொள்ளை சம்பவம் தெரிந்திருந்தும் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்காமல் உடந்தையாக இருந்த குற்றத்திற்காக மீனாட்சியையும், மகனின் கொள்ளைக்கு ஆட்டோ மூலம் உதவியதுடன் உண்மையை மறைத்த தந்தை சுரேஷையும் (50) போலீசார் கைது செய்தனர்.

 

மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு மதுரை மூன்றாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் நவம்பர் 29-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி சங்கீதா உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள நிஷாந்தை மிக நெருங்கிவிட்டதாகவும், விரைவில் அவரைக் கைது செய்து மீதமுள்ள நகைகளையும் மீட்போம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.