அதிமுக, திமுக கோட்டையா..? அல்லது தவெக-வின் புதிய உதயமா..? திருச்சி கிழக்கு தொகுதியின் தேர்தல் வரலாறு..!!

By Soundarya on சித்திரை 30, 2026

Spread the love

திருச்சி கிழக்கு தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு உதயமானது முதல் தமிழக அரசியலில் ஒரு முக்கியப் பகுதியாகப் பார்க்கப்படுகிறது. அந்த ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆர். மனோகரன் 83,046 வாக்குகள் (54.84%) பெற்று அபார வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து 2016-ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வெல்லமண்டி நடராஜன் 79,938 வாக்குகளுடன் (47.87%) தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார். இருப்பினும், 2021-ம் ஆண்டுத் தேர்தலில் களம் தலைகீழாக மாறியது; திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 94,302 வாக்குகள் (54.56%) பெற்று அதிமுகவின் கோட்டையைத் தகர்த்து வெற்றி வாகை சூடினார்.

தற்போது 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதி முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நேரடியாக இத்தொகுதியில் போட்டியிடுவது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இவரை எதிர்த்து ஆளுங்கட்சியான திமுக சார்பில் நடப்பு எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜும், அதிமுக சார்பில் ராஜசேகரனும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் கிருஷ்ணசாமியும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், மே 4-ம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகள் திருச்சி கிழக்குத் தொகுதியின் புதிய சரித்திரத்தை எழுதும் என்பதில் ஐயமில்லை.