மக்கள் தங்களது வாழ்க்கையில் நிலையைப் பொறுத்து சொந்த வீடு, வாடகை வீட்டில் வசிப்பார்கள். பெரும்பாலாக வாடகை ஒப்பந்தம் என்பது 11 மாதங்களுக்கு மட்டுமே இருக்கும். ஒருவர் எத்தனை ஆண்டுகள் ஒரே வீட்டில் வசித்தாலும் ஒப்பந்தம் ஒவ்வொரு 11 மாதங்களுக்கும் புதுப்பிக்கப்படும். இதற்கு பின்னால் சட்ட காரணம் இருப்பது உங்களுக்கு தெரியுமா? இது பற்றி சிலருக்கு மட்டுமே தெரியும்.
இந்திய பதிவு சட்டம் 1908 பிரிவு 17(d) ன் படி ஒரு குத்தகை ஒப்பந்தம் 12 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு இருந்தால் அதன் பதிவு மற்றும் முத்திரை வரி செலுத்த வேண்டியது கட்டாயம். இதனால் வீட்டு உரிமையாளருக்கு அதிக செலவு ஏற்படும். இதனை தவிர்ப்பதற்காகவே வீட்டு உரிமையாளர்கள் 100 அல்லது 200 ரூபாய் முத்திரை தாளில் 11 மாத ஒப்பந்தத்தை தயார் செய்கின்றனர்.
11 மாத வாடகை ஒப்பந்தம் ஒரு ஆவணம் மட்டும்தான். வீட்டு உரிமையாளருக்கும், ஒப்பந்ததாரருக்கும் இடையே ஏதாவது தகராறு ஏற்பட்டால், நீதிமன்றத்தை நாடும் பட்சத்தில் அது பதிவு செய்யப்படாததால் நீதிமன்றத்தில் அதன் சட்டம் மதிப்பு குறைவாகவே இருக்கும். இருப்பினும் திடீரென வீட்டு உரிமையாளருக்கும், ஒப்பந்ததாரருக்கும் தகராறு ஏற்பட்டால் அந்த ஆவணம் முக்கிய சான்றாக கருதப்படுகிறது.
ஒரு நபர் நீண்ட காலமாக ஒரு சொத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தால் அந்த சொத்தின் மீது உரிமையை பெற சொத்து பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஒரு வாய்ப்பு உள்ளது. எனவே இதுபோன்ற அபாய நிலையில் இருந்து பாதுகாப்பதற்காக வீட்டு உரிமையாளர்கள் ஒவ்வொரு 11 மாதங்களுக்கும் புதிய ஒப்பந்தத்தை தயார் செய்கின்றனர்.
