கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் உனகுந்து தாலுகா பேவூர் கிராமத்தைச் சேர்ந்த 40 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு ஓடும் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இந்தப் பெண், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிந்ததும் கணவரால் கைவிடப்பட்டுத் தனது சகோதரருடன் வசித்து வந்தார். இந்நிலையில், கூடலமங்களா கிராஸ் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இப்பெண் அரை நிர்வாண நிலையில் மயங்கிக் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக மீட்கப்பட்ட அந்தப் பெண் உனகுந்து மற்றும் பாகல்கோட்டை அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதையும், ஓடும் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதால் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதையும் உறுதி செய்தனர். இது குறித்து அந்தப் பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் பேரில், உனகுந்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, இந்த அநாகரிகச் செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
