செத்துக்கூட நிம்மதி இல்லையா..? 100 ஆண்டுக்கால சுடுகாட்டிற்கு தனிநபர் பட்டா… பிணத்துடன் சாலையில் இறங்கி மக்கள் போராட்டம்… நாமக்கல்லில் அதிரவைக்கும் பரபரப்பு…!

By Swetha on ஆனி 12, 2026

Spread the love

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள புதுப்பட்டி முனியப்பன் புதூரைச் சேர்ந்த சாந்தா (60) என்ற மூதாட்டி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலை அப்பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தனி நபர் ஒருவர், அந்த 25 சென்ட் நிலம் தனக்குச் சொந்தமானது எனக் கூறி, அவர்களுக்குப் பட்டா இருப்பதைக் காட்டி உறவினர்களை வெளியேற்றியுள்ளார். கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அருந்ததியர் சமூக மக்கள் பயன்படுத்தி வந்த மயானத்தை, தனி நபர் ஒருவர் திடீரென சொந்தம் கொண்டாடியது அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் உறவினர்கள், உயிரிழந்த மூதாட்டியின் உடலுடன் சாலையில் அமர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், மக்கள் தொடர்ந்து சாலையில் அமர்ந்து தங்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

   

“சுடுகாட்டை கூட சுரண்டிக்கொண்டு போய்விட்டார்கள்” என அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டுகின்றனர். தங்களின் முன்னோர்கள் காலம் தொட்டே பயன்படுத்தி வந்த மயான நிலத்திற்கு, தனி நபர் ஒருவர் எவ்வாறு பட்டா பெற முடியும் என்ற கேள்வியோடு, அந்த நிலத்தை உடனடியாக மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இறந்தவரின் உடலைக்கூட நிம்மதியாக அடக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் உறவினர்களின் அவல நிலை அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.