ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா நோக்கி வந்துகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ஓமன் கடல் பகுதியில் வைத்து நடத்தப்பட்ட திடீர் தாக்குதல் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிகுவா மற்றும் பார்புடா நாட்டின் கொடியுடன் பயணித்த ‘எம்வி கேப் டாவோ’ (MV Cape Davo) என்ற இந்தச் சரக்கு கப்பல், ஐக்கிய அரபு அமீரகத்தின் மினா சாகிர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு இந்தியா நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டு இருந்தது.
பயணத்தின் நடுவே ஓமன் கடற்பரப்பை நெருங்கியபோது, கப்பலை இலக்கு வைத்து அடுத்தடுத்து இரண்டு ‘டார்பிடோக்கள்’ (ஏவுகணைகள்/நீருக்கடி தாக்குதல் குண்டுகள்) வேகமாக வந்து மோதின. கப்பலின் தங்குமிடப் பகுதியான போர்ட் சைட் சி-டெக் (Port side C-Deck) மற்றும் எஞ்சின் அறை அமைந்துள்ள போர்ட் சைட் ஹல் (Port side Hull) ஆகிய இடங்களில் இந்த தாக்குதல்கள் பலமாகப் பதிந்ததால், கப்பலில் உடனடியாகப் பயங்கரத் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இந்தக் கப்பலில் மொத்தம் 28 பணியாளர்கள் பயணித்தனர்; அவர்களில் 20 பேர் இந்தியர்கள் ஆவர். தாக்குதலின் விபரீதத்தால் கப்பல் தீப்பற்றி எரிந்ததில், உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தைச் சேர்ந்த சுராஜ் யாதவ் என்ற இந்தியப் பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கப்பலில் நான்காம் நிலை எஞ்சினியராகப் பணியாற்றி வந்த தேவ்ராஜ் என்ற இந்தியருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓமன் கடற்படையினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். கப்பலில் இருந்த 19 இந்தியர்கள் உட்பட 27 பணியாளர்களை அவர்கள் பத்திரமாக மீட்டு, ‘ஜெட்டி’ பகுதிக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஓமனில் உள்ள இந்திய தூதரகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்த சுராஜ் யாதவின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தூதரக ரீதியாக மேற்கொண்டு வருகிறது.
