அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ரிச்சர்ட்சன் நகரில் ‘அமெரிக்கன் பிரீமியர் லேப்ஸ்’ என்ற பரிசோதனைக்கூடத்தை நடத்தி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காதீர் கான் முகமது, அமெரிக்க அரசின் மெடிகேர் சுகாதாரத் திட்டத்தை ஏமாற்றி பிரம்மாண்ட மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
மருத்துவர்களின் பிரத்யேக அடையாள எண்கள் மற்றும் சான்றிதழ்களைப் போலியாகத் தயாரித்து, லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு மரபணுப் பரிசோதனை செய்தது போல போலி கணக்குகளை உருவாக்கினார். இதன் மூலம் அமெரிக்க அரசிடமிருந்து 93 மில்லியன் டாலர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.800 கோடிக்கும் மேல் பணத்தைச் சுருட்டியுள்ளார். குறிப்பாக 2023-ஆம் ஆண்டில் 10 நாட்களுக்குள் மட்டும் சுமார் 13 மில்லியன் டாலர்களை அவசரமாகச் சுருட்டியுள்ளது அமெரிக்கச் சுகாதாரத் துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து எஃப்பிஐ மற்றும் அமெரிக்கச் சுகாதாரத் துறை வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய காதீர் கான் முகமதுவைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. தற்போது இவர் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரைப் பிடிக்கத் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
