அமெரிக்காவின் ஓரிகான் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அசோக் முரளிதரன் மீது 17 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு 13 வயது சிறுமியின் பெற்றோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆகஸ்ட் 15, 2025 அன்று நடைபெற்ற திறந்த இதய அறுவை சிகிச்சையின் போது, சிறுமியின் இதய வால்வை தலைகீழாகப் பொருத்தியதாக மருத்துவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தத் தவறால் அறுவை சிகிச்சைக்குப் பின் சிறுமியின் இதயம் செயல்படாமல் போனதுடன், அவர் உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்த தவறான சிகிச்சைக்குப் பிறகு, சிறுமி ஓரிகான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நெஞ்சுப் பகுதி திறக்கப்பட்ட நிலையிலேயே பல நாட்கள் உயிா்காக்கும் எக்மோ கருவியின் உதவியுடன் வைக்கப்பட்டிருந்தார். அங்குள்ள மருத்துவர்கள் முறையான விளக்கம் அளிக்காமல், சிறுமி இறக்கும் தருவாயில் இருப்பதாகக் கூறி உடல் உறுப்பு தானம் செய்வது பற்றி பெற்றோரிடம் பேசியுள்ளனர். எனினும், பெற்றோர்கள் தங்கள் மகளை சியாட்டில் குழந்தைகள் மருத்துவமனைக்கு விமானம் மூலம் மாற்றினர். அங்குள்ள மருத்துவர்கள் சிறுமிக்கு வால்வு தலைகீழாகப் பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்து, அதைச் சரிசெய்த உடனே அவரது இதயம் மீண்டும் சாதாரணமாகச் செயல்படத் தொடங்கியது.
தற்போது சிறுமி குணமடைந்து வரும் நிலையில், இந்த மருத்துவ அலட்சியத்தால் அவர்களின் மருத்துவக் கட்டணம் மட்டும் 3.35 மில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள டாக்டர் அசோக் முரளிதரன், இந்தியாவின் சென்னை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றவர் என்பதும், ஸ்டான்போர்ட் மற்றும் யேல் பல்கலைக்கழகங்களில் உயர் பயிற்சி பெற்ற புகழ்பெற்ற குழந்தை இதய அறுவை சிகிச்சை நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக ஓரிகான் மருத்துவமனை நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
