இந்தியாவில் மிகவும் மலிவாகக் கிடைக்கக்கூடிய எளிய காய்கறியான வெண்டைக்காய், அமெரிக்காவில் மிக அதிக விலைக்கு விற்கப்படும் ‘பிரீமியம்’ தின்பண்டமாக மாறியிருப்பது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆசிஷ் அஹுஜா என்ற இந்திய டிஜிட்டல் கிரியேட்டர், அமெரிக்காவின் ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்படும் வெண்டைக்காயின் விலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்து இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்க மாலில் விற்கப்படும் அந்த வெண்டைக்காய் தின்பண்டம் நன்கு வறுக்கப்பட்டு, மசாலா சேர்க்கப்பட்டு ஒரு சிறிய பெட்டியில் அடைக்கப்பட்டுள்ளது. வெறும் 85 கிராம் எடையுள்ள அந்த ஒரு சிறிய பெட்டியின் விலை 6.50 டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 600 ரூபாய் ஆகும். இந்த கணக்கின்படி பார்த்தால், ஒரு கிலோ வெண்டைக்காய் தின்பண்டத்தின் விலை சுமார் 7,250 ரூபாய் என்ற மலைக்கவைக்கும் தொகையைத் தொடுகிறது.
அமெரிக்காவில் இந்திய காய்கறிகளின் விளைச்சல் மிகக் குறைவாக இருப்பதும், இந்தியாவில் இருந்து அவற்றை அங்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவு அதிகமாக இருப்பதும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகும். மேலும், ஒரு சாதாரண காய்கறியை கவர்ச்சிகரமான முறையில் பேக் செய்து விற்கும்போது அதன் மதிப்பு பல மடங்கு உயர்கிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இந்தியாவில் 20 ரூபாய்க்கு கிடைக்கக்கூடிய இந்த வெண்டைக்காயா அமெரிக்காவில் இவ்வளவு விலை என்று வியப்புடனும் நகைச்சுவையுடனும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
