கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான அகில் ஜோயன் என்ற இளைஞர் வணிகக் கப்பலில் பணியாற்றி வந்தார். சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்து நிச்சயதார்த்தத்தை முடித்தவருக்கு இன்னும் சில வாரங்களில் திருமணம் நடைபெறவிருந்த சூழலில், குடும்பத்தினர் விழா ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திலிருந்து சோளத்தை ஏற்றிச் சென்ற ‘MV Golden Leo’ என்ற சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அகில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கப்பல் நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சல் வாயிலாக இத்துயரச் செய்தியை அறிந்த அவரது குடும்பத்தினர், திருமணக் கனவுகளுடன் காத்திருந்த மகனைப் பறி கொடுத்துவிட்டு மீளாத் துயரில் மூழ்கியுள்ளனர். சர்வதேச அளவில் உக்ரைன் – ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரினால், எவ்வித சம்பந்தமும் இல்லாத அப்பாவி இந்திய வணிகக் கப்பல் ஊழியர் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞரின் உடலை இந்தியாவிற்கு விரைவாகக் கொண்டு வர வெளியுறவுத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
