‘ஆபரேஷன் சிந்தூர்’.. எஸ்-400 ஏவுகணை அமைப்புகளை களமிறக்கும் இந்தியா.. ரஷ்யாவுடன் கைகோர்க்கும் மோடி அரசு…! திடீர்ன்னு என்ன ஆனது..?

By Swetha on வைகாசி 28, 2026

Spread the love

இந்தியாவின் வான் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், ரஷ்யாவிடமிருந்து கூடுதல் எஸ்-400 ட்ரையம்ப் ஏவுகணை அமைப்புகளைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியா தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையில் எஸ்-400 ஏவுகணை அமைப்பு அளித்த அசாதாரண வெற்றியே இந்த அவசர பேச்சுவார்த்தைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்தியாவில் ‘சுதர்சன் சக்ரா’ என்று அழைக்கப்படும் இந்த வான் பாதுகாப்பு அமைப்பு, ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் வான்வழி அச்சுறுத்தல்களை மிகத் திறம்பட முறியடித்து, இந்திய எல்லைப் பகுதிகளுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கியதாக ரஷ்யாவின் ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டாட்சி சேவை (FSVTS) உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக 2018-ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, ஐந்து ரெஜிமென்ட் எஸ்-400 அமைப்புகளை இந்தியா வாங்கியிருந்தது. இதில் முதல் மூன்று அமைப்புகள் 2023-க்குள் வழங்கப்பட்டு எல்லைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக எஞ்சிய இரண்டு அமைப்புகளின் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டது. எனினும், தற்போது இந்தத் தாமதங்கள் சரிசெய்யப்பட்டு, 4-வது ஏவுகணை அமைப்பு இந்த மே மாதத்திலும், 5-வது அமைப்பு வரும் நவம்பர் மாதத்திலும் இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC) மேலும் ஐந்து ரெஜிமென்ட் எஸ்-400 அமைப்புகளை கூடுதலாக வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

   

தற்போது, பாதுகாப்பு அமைச்சகமும் டிஆர்டிஓ-வும் (DRDO) இந்த எஸ்-400 அமைப்புகளை இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான ‘புராஜெக்ட் குஷா’ (Project Kusha) ஏவுகணை அமைப்புடன் ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் தங்களுக்குள் வான்வழித் தரவுகளைப் பகிர்ந்து கொண்டு, ஒருங்கிணைந்து இலக்குகளைத் தாக்கும் ‘படி ஃபயரிங்’ (Buddy Firing) திறனைப் பெறும். சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், வான் பாதுகாப்பு ஏவுகணைகளுடன் சேர்த்து, பிரான்சிடமிருந்து சுமார் 3.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கும் இந்தியா பிரம்மாண்ட திட்டங்களை இறுதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.