அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் முற்றியுள்ள நிலையில், டொனால்ட் டிரம்பின் போர் கொள்கைகள் இந்தியாவிற்கு கடும் எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி மையமான கத்தாரின் ‘ராஸ் லஃப்பான்’ ஆலை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இது உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா தனது மொத்த எல்.பி.ஜி (LPG) இறக்குமதியில் சுமார் 40 சதவீதத்தைக் கத்தாரிலிருந்தே பெறுகிறது. ஒட்டுமொத்த இயற்கை எரிவாயு நுகர்வில் 20 சதவீதம் கத்தாரைச் சார்ந்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல் இந்தியாவிற்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. டாலரின் ஆதிக்கத்தைத் தகர்க்க ஈரான் தனது கச்சா எண்ணெய்யைச் சொந்த கரன்சியில் விற்க முயன்றதே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்காவின் நடவடிக்கைகள் இப்போது இந்தியாவின் எரிபொருள் தேவையைப் பாதிக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
கத்தாரின் எரிவாயு ஆலைகள் அடைந்துள்ள சேதத்தின் அளவைப் பொறுத்து விநியோகம் சீராக நீண்ட காலம் எடுக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். வெறும் குழாய்கள் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தால் சில வாரங்களில் சரிசெய்யப்படலாம், ஆனால் இயந்திரங்கள் சேதமடைந்திருந்தால் 2026-ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை விநியோகம் முழுமையாகத் திரும்ப வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இதனால் இந்தியாவின் உரத் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் எரிவாயு ஏற்கனவே 70 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில், ஏப்ரல் மாத இறுதியில் ஓரளவிற்கு விநியோகம் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டாலும், போர் நீடித்தால் இந்தத் தட்டுப்பாடு 2026 ஆகஸ்ட் மாதம் வரை தொடரக்கூடும். இது இந்தியாவின் விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையாலும், ஈரான்-இஸ்ரேல் மோதலாலும் இந்தியா போன்ற வளரும் நாடுகள் எரிசக்தி பாதுகாப்பில் பெரும் சவால்களைச் சந்தித்து வருகின்றன.
