விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மரக்காணம் மற்றும் திண்டிவனம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026–27 கல்வியாண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை (Spot Admission) நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை தகுதியான மாணவ, மாணவியர் தங்களுக்கு விருப்பமான தொழிற்பிரிவுகளில் நேரடியாகச் சேரலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ், ஏர் கண்டிஷனிங், வெல்டர், வயர்மேன், சோலார் டெக்னிஷியன், ரோபோடிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்பு சார்ந்த தொழிற்பிரிவுகள் மாணவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளன.
வெல்டர் மற்றும் வயர்மேன் தொழிற்பிரிவுகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதுமானதாகும். மற்ற அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அவசியம். பெண்களுக்கு வயது உச்சவரம்பு இல்லாத நிலையில், ஆண்கள் 14 முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் ரூ.50 விண்ணப்பக் கட்டணம் செலுத்தி நேரடியாக ITI-களில் சேரலாம்.
பயிற்சிக் காலத்தில் இலவச பாடப்புத்தகங்கள், சீருடை, மிதிவண்டி, காலணி, பேருந்து பாஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும் மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகையும், அரசுப் பள்ளியில் படித்த தகுதியான மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டங்களின் கீழ் கூடுதலாக ரூ.1,000 வழங்கப்படும். பயிற்சி நிறைவடைந்ததும் முன்னணி நிறுவனங்களில் குறைந்தபட்சம் மாதம் ரூ.20,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த வாய்ப்பை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
