ஆந்திர மாநிலம் குண்டூர் கிருஷ்ணபாபு காலனியில் குடிநீர் மோட்டார் இணைப்பு தொடர்பான தகராறில், பெண் ஒருவர் ஆடைகள் களையப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஜூலை 15 ஆம் தேதி இரவு, தனது வீட்டிற்கு முன்பிருந்த மோட்டாருடன் இணைக்கப்பட்ட குழாயில் அந்தப் பெண் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, டிடிபி கட்சியின் 21-வது பிரிவு செயலாளர் மல்லேலா வெங்கடரமண மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அந்தப் பெண்ணைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதிலிருந்து தப்பிக்க அவர் வீட்டிற்குள் ஓட முயன்றபோது, மாதவி என்ற திருநங்கை அந்தப் பெண்ணின் ஆடைகளைக் களைந்து, காலால் உதைத்தும் மிதித்தும் கொடூரமாகத் தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் எவ்வளவு கெஞ்சியும், அவர்கள் தங்களது கொடூரத் தாக்குதலை நிறுத்தவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
https://twitter.com/HateDetectors/status/2078390689935806656/photo/1
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஜூலை 16 அன்று அளித்த புகாரின் பேரில், நாகரம்பாளையம் காவல் நிலைய வட்டார ஆய்வாளர் சத்யநாராயணா, மல்லேலா வெங்கடரமண மூர்த்தி உட்பட ஒன்பது பேர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில், இச்சம்பவத்திற்கு கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சர் நாரா லோகேஷ் தனது அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். அரசியல் செல்வாக்கோ அல்லது கட்சிப் பின்னணியோ சட்டத்தின் பிடியிலிருந்து யாரையும் காப்பாற்றிவிட முடியும் என்று நினைப்பவர்கள் முற்றிலும் தவறான கணக்குப் போடுகிறார்கள் என்றும், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
