வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பகுதியைச் சேர்ந்த 32 வயது திருமணமான பெண் ஒருவருக்கு, நீண்ட நாட்களாகவே காவல்துறை சீருடை அணிந்து கம்பீரமாக வலம் வர வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இப்பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான குமரேசன் என்பவருக்கும் இடையே திருமணத்திற்கு மீறிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், தனது காதலியின் நீண்ட நாள் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற குமரேசன் ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளார்.
தனது காதலியின் பிறந்தநாளைச் சிறப்பானதாக மாற்ற நினைத்த குமரேசன், இதற்காகச் சென்னைக்குச் சென்று அச்சு அசலாக காவல்துறை அதிகாரிகள் அணியும் சீருடைத் துணிகளை வாங்கியுள்ளார். பின்னர் ஒரு தையல்காரரிடம் கொடுத்து, ‘டி.எஸ்.பி’ (DSP) அந்தஸ்திலான போலீஸ் சீருடை ஒன்றை ரகசியமாகத் தைத்துள்ளார். இந்த சீருடையைப் பிறந்தநாளுக்கு முன்தினமே காதலிக்குப் பரிசாக வழங்கி, அதனை உடுத்தி வேலூர் கோட்டையில் கேக் வெட்டிக் கொண்டாட இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
திட்டமிட்டபடி, பிறந்தநாள் அன்று அந்தப் பெண் டி.எஸ்.பி சீருடையை அணிந்து கொண்டு காதலனுடன் வேலூர் கோட்டைக்கு வந்துள்ளார். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த அந்தப் பகுதியில், நிஜமான போலீஸ் அதிகாரி போலவே அவர் வலம் வந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அப்போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார், அந்தப் பெண்ணின் செயல்பாடுகளில் சந்தேகம் அடைந்து, அவரிடம் “நீங்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி?” என்று விசாரித்துள்ளனர்.
போலீசாரின் திடீர் கேள்வியால் பதற்றமடைந்த அந்தப் பெண், முன்னுக்குப் பின் முரணான பதில்களைக் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் வலுத்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் காவல் துறையையே சேர்ந்தவர் அல்ல என்பதும், காதலன் கொடுத்த பரிசை அணிந்து போலி அதிகாரியாக வலம் வந்ததும் அம்பலமானது. இதையடுத்து, போலி சீருடை அணிந்து பொதுமக்களை ஏமாற்ற முயன்றதாக அந்தப் பெண் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவருக்கு உடந்தையாக இருந்த லாரி ஓட்டுநர் குமரேசனையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
