சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகளிர் விடுதி மாடியில் இருந்து குதித்து, 22 வயது இளம் ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த ராஜாவின் மகள் ஜீவப்பிரியா (22). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள பிரபல ஹெச்.சி.எல். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதற்காக, சோழிங்கநல்லூர் லால் பகதூர் சாஸ்திரி தெருவில் அமைந்துள்ள ‘கிருஷ்ணா பெண்கள் விடுதி’யில் தங்கி தினசரி வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு விடுதிக்குத் திரும்பிய ஜீவப்பிரியா, நள்ளிரவில் தனது ஆண் நண்பரான சந்தோஷ் என்பவருடன் செல்போனில் பேசிக்கொண்டே விடுதியின் மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தனிப்பட்ட காரியங்கள் தொடர்பாகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த விவாதம் நீடித்த நிலையில், நள்ளிரவு 12.30 மணியளவில் ஆத்திரமும் மன உளைச்சலும் அடைந்த ஜீவப்பிரியா, “நான் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்” என்று சந்தோஷிடம் கூறிவிட்டு திடீரென போனை துண்டித்துள்ளார்.
இதனால் பதறிப்போன சந்தோஷ், உடனடியாக அதே பகுதியில் மற்றொரு விடுதியில் தங்கியிருந்த ஜீவப்பிரியாவின் தோழி சஞ்சுஸ்ரீயைத் தொடர்புகொண்டு விபரத்தைக் கூறி தேடுமாறு கேட்டுக்கொண்டார். அதிர்ச்சியடைந்த சஞ்சுஸ்ரீ விரைந்து சென்று பார்த்தபோது, ஜீவப்பிரியா விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு உறைந்துபோனார். உடனே அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்க முயன்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஜீவப்பிரியாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபரீத முடிவு காதலருடன் ஏற்பட்ட தற்காலிக கோபத்தால் எடுக்கப்பட்டதா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜீவப்பிரியாவின் செல்போன் அழைப்பு விவரங்கள் (CDR), அவரது நண்பர்கள் மற்றும் விடுதி நிர்வாகத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
