“நாங்க வேணா தேடிப் பார்க்கட்டுமா?”…விவசாயிக்கு நேர்ந்த கொடூரம்…அப்பாவியாக நாடகமாடிய கள்ளக்காதல் ஜோடி…ஈரோட்டை உலுக்கிய பயங்கரம்…!!

By Gayathri on ஆவணி 10, 2026

Spread the love

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சோலையம்பாளையம் பகுதியில் தனது தோட்டத்தில் தனியாக வசித்து வந்த 68 வயது விவசாயி சுப்பிரமணியம், கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று மர்மமான முறையில் கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். வெளியூரில் இருந்த அவரது மகள் பலமுறை தொலைபேசியில் அழைத்தும் அவர் பதிலளிக்காததால், சந்தேகத்தின் பேரில் அக்கம்பக்கத்தினரைத் தொடர்புகொண்டு தேடச் சொன்னபோதுதான் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. சுப்பிரமணியத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், பவானி காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, ஆரம்பக்கட்டமாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

காவல்துறையினரின் தீவிர விசாரணையில் இந்தச் சம்பவம் ஒரு கொடூரமான கொலை என்பது அம்பலமானது. சுப்பிரமணியத்தின் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த சோளப்பயிர்களை, அதே பகுதியைச் சேர்ந்த செல்லாயி என்பவரது ஆடுகள் மேய்ந்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியம் அவரைத் திட்டியுள்ளார். இந்த முன்விரோதத்தின் காரணமாக, செல்லாயி தனது கள்ளக்காதலனும், சுப்பிரமணியத்தின் உறவினருமான மாரியப்பனிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார். இதையடுத்து, அன்று இரவு இருவரும் சுப்பிரமணியத்திடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, மாரியப்பன் முதியவரைத் தள்ளிவிட்டுள்ளார். இதில் கிணற்றுத் திட்டில் தலையில் பலமாக அடிபட்டு கிணற்றுக்குள் விழுந்த சுப்பிரமணியம், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

   

கொலையைச் செய்துவிட்டு உடனடியாக தங்களது வீடுகளுக்குத் திரும்பிய இந்த ஜோடி, எதுவும் தெரியாதது போல் கொடூரமாக நாடகமாடியுள்ளது. முதியவரின் மகள் தொலைபேசியில் அழைத்துத் தனது தந்தையைத் தேடுமாறு மாரியப்பனிடம் கூறியபோது, அவரும் செல்லாயியும் ஊர் மக்களுடன் இணைந்து தேடுவது போலவும், ஆம்புலன்ஸில் உடலை ஏற்றும் வரை அங்கேயே இருந்து கவலைப்படுவது போலவும் பாசாங்கு செய்துள்ளனர். ஆனால், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கிய இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.