சென்னை பெரம்பூர் சக்கரபாணி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (34). திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், அதே பகுதியில் கணவனை பிரிந்து வசித்து வரும் பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இவர்களின் இந்த தகாத உறவை அப்பெண்ணின் தந்தை பாபு (53) பலமுறை கண்டித்தும், ரமேஷ் அதைக் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வந்துள்ளார். மேலும், ரமேஷ் ஏற்கனவே ஒரு போக்சோ வழக்கில் கைதாகி சிறை சென்று திரும்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து எச்சரித்தும் ரமேஷ் தன் போக்கை மாற்றிக்கொள்ளாததால் ஆத்திரமடைந்த பாபு, நேற்று முன்தினம் சக்கரபாணி தெருவில் உள்ள ரமேஷின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், பாபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமேஷை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த செம்பியம் போலீசார் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து, ரமேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரமேஷின் மனைவியான ஷர்மிளாவும் அவரது நடத்தையில் உடன்பாடின்றி ஏற்கனவே பிரிந்து சென்றுவிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த செம்பியம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி பெண்ணின் தந்தையான திரு.வி.க. நகரைச் சேர்ந்த பாபுவை கைது செய்துள்ளனர். பெரம்பூர் பகுதியில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபர் குத்தி கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
