அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான (MP) திருச்சி ஆ. இளவரசன், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித சூழலிலும் கட்சி மாறாமல், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் விசுவாசியாகப் பணியாற்றி வந்த அவர், தற்போது அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக தலைமை துடுப்பில்லாத படகைப் போல் தத்தளிப்பதாகத் இளவரசன் தனது ராஜினாமா கடிதத்தில் மிகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். உழைப்பிற்கும் விசுவாசத்திற்கும் மதிப்பளிக்காமல் கடந்த 10 ஆண்டுகளாகத் தன்னை மட்டுமின்றி, ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் பலரையும் தற்போதைய அதிமுக தலைமை (எடப்பாடி பழனிசாமி தரப்பு) தொடர்ந்து புறக்கணித்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். உழைப்பவர்களுக்கு முக்கியத்துவம் தராமல், பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட சீட் மற்றும் கட்சிப் பதவிகள் வழங்கப்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
