Vijayakanth

இளையராஜா செய்த மேஜிக்… விஜயகாந்த் பட பாடலை தேடி வந்து ரசித்த யானை…

By Meena on ஆகஸ்ட் 2, 2024

Spread the love

விஜயராஜ் அழகர்சாமி என்ற இயற்பெயரை கொண்டவர் நடிகர் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்தவர். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர், திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இது தவிர தமிழக மக்களுக்காக அரசியல் கட்சியை நிறுவி அரசியல்வாதியாகவும் இருந்தவர். ‘கருப்புத் தங்கம்’, அள்ளி கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தக்காரரான விஜயகாந்த் ‘கருணை வள்ளல்’ எனவும் அன்போடு மக்களால் அழைக்கப்பட்டார்.

தமிழ் சினிமாவில் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் விஜயகாந்த். ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘பூந்தோட்ட காவல்காரன்’, ‘சின்ன கவுண்டர்’, ‘வானத்தைப்போல’, ‘ஆனஸ்ட்ராஜ்’ போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் விஜயகாந்த். போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்ததால் இவரை கேப்டன் விஜயகாந்த் என்றும் அழைப்பர். விஜயகாந்த் தமிழ்நாட்டின் உயரிய சிவிலியன் கலைமாமணி விருது, இந்தியாவின் மூன்றாவது உயந்த விருதான பத்மபூஷன் விருது ஆகியவற்றை வென்றுள்ளார்.

   

விஜயகாந்த் நடிப்பில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘வைதேகி காத்திருந்தாள்’. இப்படத்தில் விஜயகாந்த் உடன் ரேவதி, சுரேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். ஆர் சுந்தர்ராஜன் இப்படத்தை எழுதி இயக்கியிருந்தார். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. விஜயகாந்தின் கேரியரில் ‘வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இத்திரைப்படம் தெலுங்கில் ‘மான்சி மனசலோ நெஞ்சம்’, கன்னடத்தில் ‘ப்ரீத்தி நீ இல்லடே நா ஹேகிரஅலி’ என்றும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

   

வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா.இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் ஆனது.குறிப்பாக ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’ பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி பிரபலமானது. இப்பாடலுக்கு பின்னால் ஒரு சுவாரசியமான கதை ஒன்றும் உள்ளது.

 

இசை உலகின் சக்கரவர்த்தி என்றால் அது இசைஞானி இளையராஜா தான். சிறியவர் முதல் பெரியவர் வரை அவரின் பாடல்களை ரசிப்பவர்கள் ஏராளம். தனது இசையின் மூலம் நம் மனதை கரைந்து போக செய்து விடுவார் இளையராஜா. இந்த வரிசையில் மிருகங்களும் சேர்ந்து கொண்டது வைதேகி காத்திருந்தாள் படம் வெளியான போது நிரூபணம் ஆகியுள்ளது. சிலருக்கு சொல்லி அழுவதற்கு முடியாத சோகங்கள் மனதிற்குள் இருக்கலாம் அதை தேற்றிக் கொள்ள பாடல்கள் மூலம் ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள்.

அதேபோல் தேனி கம்பம் ஆகிய பகுதிகளில் வைதேகி காத்திருந்தாள் படம் ஓடும்போது வெளியே ஸ்பீக்கரில் ராசாத்தி உன்ன பாடல் கேட்கும் பொழுது அங்கு பக்கத்தில் காட்டு பகுதியில் உள்ள ஒரு யானை ஊருக்குள் வந்து அந்த பாடலை நின்று கேட்டுவிட்டு செல்லுமாம். இந்த திரைப்படம் எத்தனை நாள் ஓடியதோ அத்தனை நாட்களும் அந்த பாடல் இசை கேட்டவுடன் அந்த யானை ஓடிவந்து நின்று \இளையராஜா அவர்களின் பாடலை ரசித்து கேட்குமாம். என்று அந்த படம் நிறுத்தப்பட்டதோ அன்று முதல் யானை வருவதில்லையாம். அதற்கு காரணம் என்னவென்றால் அந்த யானையின் குட்டி படம் வருவதற்கு சிறிது காலம் முன்னால் இறந்து விட்டதாம். அந்த சோகத்தை சொல்ல முடியாத அந்த வாயில்லா ஜீவன் இளையராஜா அவர்களின் அந்த பாடலை கேட்டு ஆறுதல் தேடிக் கொண்டிருக்கிறது என்பது பின்னாளில் தெரிய வந்ததாக இளையராஜா அவர்களே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.