தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
அதுபோல இளையராஜாதான் நாட்டுப்புற பாடல்களில் இருந்தே ட்யூன்களை எடுத்து அதை மெருகேற்றி பாடல்களை கொடுத்து மக்களை மெய்மறந்து ரசிக்க வைத்தார். இளையராஜா அறிமுகமான போது அவருக்கு மக்களிடம் கிடைத்த ஆதரவு அப்போதிருந்த விமர்சகர்களிடம் கிடைக்கவில்லை.

#image_title
அப்போதிருந்த விமர்சகர் ஒருவர் எழுதிய விமர்சனக் கட்டுரையில் “இளையராஜாவின் இசை சிறப்பான ஒன்று இல்லை. ஒன்றிரண்டு படங்கள் ஹிட்டாகும். அதன் பின்னர் அவர் ஓரம்கட்டப் படுவார்” என எழுதியுள்ளார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக இளையராஜா ஒரு பாடலைக் கொடுத்துள்ளார்.
அதுதான் பொண்ணு ஊருக்கு புதுசு என்ற படத்தில் இடம்பெற்ற “ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது” என்ற பாடல். அதில் இளையராஜாவைப் பெருமைப் படுத்தும் விதமாக அவரது தம்பி கங்கை அமரன் சில வரிகளை எழுதியுள்ளார். அதில் இருந்த சில வரிகள் அப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அதனால் அந்த பாடலை ஒலிபரப்ப மாட்டோம் என அகில இந்திய வானொலி தடை விதித்துள்ளது. அப்படி செய்தால் அந்த பாடல் ஹிட்டாகாது என நினைத்துள்ளனர். ஆனால் கிராமப் புறங்களில் உள்ள டீக்கடை மற்றும் திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட சுபகாரியங்களில் இந்த பாடல் ஒலிபரப்பப்பட்டு சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இப்போது வரையும் இந்த பாடல் ரசிகர்களின் விருப்பத்துக்குரியதாக இருக்கிறது.